கிராமங்களுக்கு இடையே தகராறு... உறுதி அளித்த சார் ஆட்சியர் - வாபஸ் பெற்ற மீனவர்கள்
மீன் பிடித்தல் தொடர்பாக கிராமங்களுக்கிடையே இருந்து வரும் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என சார் ஆட்சியர் உறுதியளித்ததையடுத்து, மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. சில கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கடலிலும், சில கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பழவேற்காடு ஏரியிலும் மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர். இதனிடையே. கூனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மக்கள், பாரம்பரியமாக கடலிலும், வாரத்திற்கு 2 முறை பழவேற்காடு ஏரி பகுதியிலும் மீன் பிடித்து வந்துள்ளனர். இதையடுத்து ஆண்டிக்குப்பம், நடவூர் உள்ளிட்ட 9 மீனவ கிராம மக்கள், கூனாங்குப்பம் மீனவர்கள் ஏரியில் மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூனாங்குப்பத்தினர் ஏரியில் மீன் பிடிப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மற்ற கிராம மக்கள் கூறுகின்றனர். இதனால், கூனாங்குப்பம் கிராம மக்கள் பல முறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டுகின்றனர். இதையடுத்து, அக்கிராம மக்கள் தங்கள் அரசு ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து, ஊரை விட்டு வெளியேறுவதாக தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளைய தினம் குறிப்பிட்ட கிராம மக்களிடம் பேசி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். சார் ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி தற்போது, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.