அரசியல் வரலாற்றின் திருப்புமுனை.. ஓபிஎஸ்ஸின் 'தர்மயுத்த' நாள் இன்று..!

Update: 2023-02-07 07:18 GMT

ஜெயலலிதா அமைச்சரவையில் இரண்டாவது இடம் வகித்த ஓபிஎஸ், 2001 மற்றும் 2014ல் ஜெயலலிதா பதவி விலக வேண்டிய சூழல் உருவான போது, தமிழக முதல்வராக சில மாதங்கள் பதவி வகித்தார்.

2016 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நிதித்துறையை மட்டும் அவரிடம் கொடுத்திருந்தார் ஜெயலலிதா. 2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைந்த பின், அந்த நேர குழப்பங்களை தவிர்க்க ஓபிஎஸ்.ஸை தற்காலிகமாக முதல்வர் ஆக்கினார் சசிகலா.

2016 டிசம்பர் 29ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாள ராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2016 டிசம்பரில் ஏற்பட்ட வர்தா புயல், 2017 ஜனவரியில் நடந்த ஜல்லிக்காட்டு போராட்டங்களினால், சசிகலா முதல்வராகும் திட்டம் தாமதமானது.

இந்நிலையில் தம்பிதுரை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள், கட்சியும் ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்று பேசத் தொடங்கினர்.

2017 பிப்ரவரி 5ல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராக சசிகலா ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். இதைத் தொடர்ந்து ஒ.பி.எஸ் முதல்வர் பதவியை பிப்ரவரி 6ல் ராஜினாமா செய்தார்.

அடுத்த முதல்வர் பதவியேற்கும் வரை இடைகால முதல்வராக தொடர வேண்டும் என ஆளுநர் வித்தியா சாகர் ராவ் ஓ.பி.எஸை கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ஒ.பி.எஸ்க்கு விருப்பமில்லை என்றும், அவரை கட்டாயப் படுத்தி ராஜினாமா செய்ய வைத்தாகவும் தகவல்கள் வெளியாகின.

பிப்ரவரி 7ஆம் தேதி மாலை 7 மணிக்கு மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வந்த ஓ.பி.எஸ், யாரிடமும் எதுவும் சொல்லாமல், கண்களை மூடி தியானத்தை தொடங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், சசிகலாவின் நிர்ப்பந்தத்தால் ராஜினாமா செய்ததாகவும். சசிகலாவை பற்றி 10 சதவீததம் தான் கூறியிருக்கிறேன், தேவைப்படும்போது மீதமுள்ள 90 சதவீதத்தை கூறுவேன் என்று கூறி அதிர்வலை களை ஏற்படுத்தினார்.

சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து வெளியேற்றுவது, ஜெயலலிதா மரணத்தைப் பற்றி விசாரணை குழு அமைப்பது ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து தனது தர்ம யுத்தத்தை தொடங்கினார். 2017ல் இதை ஈ.பி.எஸ் தரப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, இரு அணிகளும் இணைந்தன.

தமிழக அரசியல் வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்திய ஓ.பி.எஸின் தர்ம யுத்தம் தொடங்கப்பட்ட தினம், 2017 பிப்ரவரி 7.

Tags:    

மேலும் செய்திகள்