உயிரணுக்கள் வழியே பரவும் கொலைகார வைரஸ்.. பாதிக்கப்பட்ட 54 பேரில் 19 உயிர்களை பறித்தது - உகாண்டாவில் அதிர்ச்சி
உலகையே அச்சுறுத்தும் கொடிய வைரஸ்களில் ஒன்று எபோலா...
1976 ஆம் ஆண்டு காங்கோவில் காணப்பட்ட வைரஸ் அவ்வப்போது மனித குலத்தை மிரட்டி வருகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு எபோலா நோய் பரவல் உலகை ஆப்பிரிக்காவை நோக்கி பார்க்கச் செய்தது. வைரஸ் தொற்றால் 11 ஆயிரம் பேர் பலியாகினர். பாதிக்கப்பட்டவர் களில் பெரும்பான்மையினர் இறந்தனர் என்பது பேரதிர்ச்சி யாக இருந்தது.
மனிதனின் ரத்தம், எச்சில், வியர்வை, கபம், வாந்தி, சிறுநீர், மலம், உயிரணுக்கள் வாயிலாக பரவும் வைரஸ்.... காய்ச்சல், உடல்வலி, தொண்டை வலி, சோர்வுடன் தொடரும் பாதிப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு, தோலில் அரிப்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை பாதித்து, உள் உறுப்புகளில் ரத்தக்கசிவை ஏற்படுத்தி கொல்லும் கொலைக்கார வைரஸ்...
இப்போது ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் பரவி வருகிறது. நாட்டில் 54 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ள நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே பரவிய சயர் திரிபுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், உகாண்டாவில் இப்போது பரவும் எபோலா வைரஸ் சூடான் திரிபு என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு எதிராக ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகள் ஏதும் இல்லை என்பது உகாண்டாவிற்கு சவாலாக அமைந்திருக்கிறது.
4-வது முறையாக எபோலா பரவலை எதிர்க்கொண்டிருக்கும் உகாண்டா, பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்துகளை கொண்டு சிகிச்சை அளித்துவரும் நிலையில், பாதிப்பு அதிகமாக காணப்படும் முபெண்டே, கசாண்டா மாவட்டங் களில் 3 வாரங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. பாதிப்பு காணப்படுபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் வரும் நவம்பர் மாத இறுதிக்குள், உகாண்டாவில் பரவி வரும் எபோலாவுக்கான சோதனை தடுப்பூசியின் 30 ஆயிரம் டோஸ்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.