"நூதன கொள்ளை.. ஆசையை தூண்டி மோசடி" - ஏமாந்துபோன மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
கிரிப்டோ கரண்சியில் முதலீடு செய்வதாகக் கூறி சுமார் 200 கோடிக்கும் மேல் நிதி நிறுவனம் மோசடி செய்ததாக பொதுமக்கள் புகாரளித்துள்ளனர்.
சமீப நாள்களில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம், ஐ எஃப் எஸ் மற்றும் ஹிஜாபு ஆகிய நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் பணத்தை இழந்தனர். இதன் வரிசையில் ஹாஷ்பே என்ற நிறுவனம் கிரிப்டோ கரண்சியில் முதலீடு செய்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எம் எல் எம் என்ற அடிப்படையில் ஆள்களை சேர்த்து விட்டு கமிஷன் மூலம் கிரிப்டோ கரண்சியில் முதலீடு செய்வதாகக் கூறி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், 300 நாள்களில் மூன்று லட்ச ரூபாயாக மதிப்பு அதிகரிக்கும் என நிறுவனம் உத்தரவாதம் அளித்ததாகக் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், நடிகைகள் காஜல் அகர்வால், தமன்னா உள்ளிட்டோரை அழைத்து விளம்பர நிகழ்ச்சிகளை அந்நிறுவனம் நடத்தியதன் அடிப்படையில் நம்பி பணம் முதலீடு செய்ததாகவும் பணத்தை பறிகொடுத்தவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.