பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள குல் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவறி விழுந்த குழந்தை சுபம் குமாருடன் விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு குழந்தை, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோருக்குத் தெரிவித்ததை அடுத்து விஷயத்தை சுபம் குமாரின் பெற்றோர் அறிந்தனர். 150 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் குழந்தை 50 முதல் 60 அடியில் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. சுபம் குமார் அழும் சத்தம் கேட்கும் நிலையில், பக்கவாட்டில் குழி தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எம்பி கவுசலேந்திர குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். ஆழ்துளை கிணற்றில் உள்ள குழாய் மூலம் குழந்தைக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. பாட்னாவில் இருந்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.