பரபரப்பான சென்னை சாலையில் திருநங்கையை வைத்து ட்ராபிக் SI செய்த சர்ச்சையான செயல்.. பின்னணி என்ன?

Update: 2023-06-09 06:29 GMT

சாலை விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, திருநங்கையை வைத்து சாலையிலேயே பூசணிக்காயை உடைக்க வைத்த போக்குவரத்து உதவி ஆய்வாளரின் செயல் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதனை விரிவாக பார்ப்போம்...

பரபரப்பாகவே காணப்படும் சென்னையின் பல்வேறு பகுதிகளில், சாலை விபத்துகள் என்பது நேர்ந்த வண்ணமே உள்ளன. மதுரவாயல், வானகரம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலைகள் என ஒரு சில இடங்கள், சாலை விபத்துகளுக்கு போர் போன இடங்களாகவே கருதப்படுகிறது.

சாலையில் விபத்துகளை தடுத்து, உயிரிழப்புகள் நிகழாமல் இருக்கும் வண்ணம், அரசு சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை போக்குவரத்து போலீசாரும், விபத்துகளை தடுக்க, ஒவ்வொரு சிக்னலிலும் ஆடியோ மற்றும் டிஜிட்டல் பெயர் பலகைகள் மூலமாக, வாகன ஓட்டிகளுக்கு, சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.

வாகன ஓட்டிகளின் கவனக்குறைவு மட்டுமல்லாமல், சென்னையில் உள்ள சாலையில் ஆங்காங்கே இருக்கும் பள்ளம், மேடுகள் போன்றவை கூட, விபத்துக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

அதற்கும் மேலாக, சாலையில் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துவது பூசணிக்காய்...

ஆயுதபூஜை, அமாவாசை என முக்கிய நாட்களில் சாலைகளில் உடைக்கப்படும் பூசணிக்காயால், விபத்துகள் அதிகளவில் நிகழ்ந்து இருப்பதுதான் இதற்கு காரணம் என தகவல்கள் கூறுகின்றன.

சாலையில் பூசணிக்காயை உடைக்கக்கூடாது என போக்குவரத்து போலீசாரே அறிவுறுத்தி வரும் நிலையில், தற்போது, மதுரவாயல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரின் செயல் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரவாயல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பழனி என்பவர், போலீஸ் வாகனத்தில் திருநங்கை ஒருவரை ஏற்றிக்கொண்டு, அடிக்கடி விபத்து ஏற்படும் சாலைகளுக்கு அழைத்துச் சென்று, விபத்து நடக்காமல் இருக்க, சாலையில் பூசணிக்காயை உடைக்க வைத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, வானகரத்தில் உள்ள சாலையில், திருநங்கையை வைத்து பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம்பழம் வைத்து திருஷ்டி சுற்றி போட வைத்தார்.

சாலையில் பொதுமக்கள் பூசணிக்காயை உடைக்கக்கூடாது என போக்குவரத்து போலீசார் எச்சரித்து வரும் நிலையில், மதுரவாயல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பழனியின் இந்த செயல் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்