பாம்பு கடித்து ஒன்றரை வயது குழந்தை பலி… சடலத்தை 10 கிலோ மீட்டர் சுமந்து சென்ற குடும்பம்
வேலூர் மாவட்டம் , அணைக்கட்டு தாலுகாவில் உள்ளது அத்திமரத்து கொல்லை கிராமம். இதே கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி.. கூலி வேலைச் செய்து வந்திருக்கிறார். விஜிக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற அழகான பெண் குழந்தை இருந்துள்ளார். கூலி வேலைச் செய்து குறைவான வருமானம் சம்பாதித்தாலும் மகள் தனுஷ்காவை இளவரசியாகவே வளர்த்து வந்திருக்கிறார் விஜி… உயிருக்கு உயிராக வளர்ந்து வந்த தனுஷ்காவுக்கு ஒரு நாள் எமன் குறித்திருக்கிறான்.
சம்பவத்தன்று இரவு வெக்கை காரணமாக விஜியும் அவரது குடும்பத்தினரும் வாசலில் படுத்துறங்கியிருக்கிறார்கள்…சுற்றிலும் மலைகள், காடுகள் இருப்பதால் புதருக்குள் இருந்து வெளியில் வந்த நல்ல பாம்பு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தனுஷ்காவை கடித்திருக்கிறது…குழந்தை அழுவதை கேட்டு அலறி அடித்து எழுந்த பெற்றோர் , தனுஷ்காவை பாம்பு தீண்டிருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்… குழந்தையின் உயிரை காப்பாற்ற உடனே அணைக்கட்டு பகுதியிலிக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்… ஆனால், பாம்பு கடித்து நீண்ட நேரமாகிவிட்டதால் , உடல் முழுவதும் விஷம் பரவி தனுஷ்காவின் உயிர் பிரிந்துவிட்டது…தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவுச் செய்து , உடற்கூறு ஆய்விற்காக தனுஷ்காவின் உடலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள்.உடற்கூறு ஆய்வு முடிந்து குழந்தையின் உடல் வீட்டிற்கு கொண்டுச் செல்ல ஆம்புலன்ஸில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது… அப்போதுதான் கிராமத்துக்குள் செல்ல சாலை வசதி இல்லாததால் , ஊருக்கு வெளியிலேயே குழந்தையின் சடலத்தையும் குடும்பத்தினரையும் இருக்கிவிட்டுவிட்டு ஆம்புலன்ஸ் சென்றிருக்கிறது…
ஏற்கனவே குழந்தையின் உயிரை பறிகொடுத்த துக்கத்திலிருந்த குடும்பத்தினருக்கு சடலத்தை கொண்டுச் செல்ல முடியாமல் போனது மேலும் மனவுளைச்சலை ஏற்படுத்திருக்கிறது… பாதி தூரம்வரை தனுஷ்காவின் சடலத்தை பைக்கில் எடுத்துச் சென்றவர்கள்… அதற்குமேல் பைக் செல்ல வழியில்லாததால் , அந்த ஒற்றைஅடி பாதையில்… தன் பேத்தியின் உடலை 10 கிலோ மீட்டர் தூரம் சுமந்தே சென்றிக்கிறார் தனுஷ்காவின் பாட்டி…அல்லேரி மலையை சுற்றி பத்திற்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. அதில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இந்த கிராமத்தில் சாலை, மருத்துவம் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இது தான் தற்போது ஒரு பிஞ்சு உயிர் பறிபோனதற்கு காரணமாகியிருக்கிறது.
மேலும் இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் , பல குடும்பங்கள் பாதுகாப்பு கருதி பெண் பிள்ளைளை வீட்டிலேயே முடக்கிவிடுகின்றனர்…பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் சந்திராயனுக்கு வெற்றிகரமாக ராக்கெட் அனுப்பும் அரசாங்கத்தால் 10, 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலையிலிருந்து சாலை போட்டு தரமுடியாமல் போவது ஏன் என்ற சமூக ஆர்வலர்களின் கேள்விக்கு இன்னும் விடைகிடைக்கவில்லை.