மோடிக்கு சொந்த மாநிலமான குஜராத்தில் ஜெயித்தே ஆகணும் கட்டாயத்தில் பாஜக | Gujarat Election 2022
2024ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலைப் போலவே,
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலிலிலும் வெற்றிபெற்றாக வேண்டும் என்கிற முனைப்போடு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. பகீரதப் பிரயத்தனம் செய்துவருகிறது.
2014ஆம் ஆண்டுவரை குஜராத்தில் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, அந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது தேசிய அரசியலில் குதித்தார்.
முதல் முறையிலேயே பிரதமராகவும் ஆனவர், 2019 மக்களவைத் தேர்தலில் கூடுதல் பலத்துடன் வென்று காட்டினார். வலுவான எதிர்க்கட்சியே இல்லை என்கிற படியாக வெற்றி ஈட்டிய அவருக்கு, சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த சட்டப்பேரவைத் தேர்தல் முக்கியமான கௌரவப் பிரச்னையாகவும் வந்துநிற்கிறது.
மூன்று தேர்தல்களிலுமே பாஜக முன்வைப்பது, குஜராத் மாடல் கோஷத்தைத்தான்! இங்கு மோடி முதலமைச்சராக இருந்த காலம்தொட்டே, குஜராத் மாடல் என்கிற கோஷம் பாஜகவால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த கோஷத்தை முன்னிறுத்தியதே, மோடி முதல் முறை பிரதமர் பதவியை அடைந்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
குஜராத்தில் பயிர் நிலங்களின் வறட்சியைப் போக்க பரவலாக பாசன வசதியை அளித்தது, சூரிய சக்தி மின்சாரத்தைப் பெருக்கியது போன்ற சில திட்டங்கள், பாஜகவின் குஜராத் மாடல் பெருமிதத்தில் முக்கியமாக இடம்பிடித்துள்ளன.
இருபத்தேழு ஆண்டுகளாக குஜராத் ஆட்சிக் கட்டிலில் பாஜக இருந்துவரும் நிலையில், மாநிலத்தில் வளர்ச்சியும், நல்ல சுற்றுச்சூழலும், வேலைவாய்ப்பும் நிலவுகிறதா என்று எதிர்மறைக் கேள்விகளும் முன்வைக்கப்படுவதைப் பார்க்கமுடிகிறது.
சூரத் போன்ற பெரிய தொழில் நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் செய்யப்பட்டுள்ளன. சாலைகள், மேம்பாலங்கள் என போக்குவரத்துக் கட்டமைப்பு வலுவாக்கப்பட்டுள்ளது.
சூரத் நகரில் மட்டும் 115 மேம்பாலங்கள் இருக்கின்றன. இதைப்போல மாநிலத்தின் தலைநகர் காந்திநகரிலும் வசதிகளுக்கு குறைவில்லை. ஆனாலும், வேலையின்மை யை முக்கிய பிரச்னையாக எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தில் முன்வைத்துள்ளன.
பொதுவாக, இங்கு அரசுத் துறைகளில் முழு நேரப் பணியாளர் களை நியமிக்காமல், அனைத்து துறைகளிலும் தற்காலிக மாகவே பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். பெரிய மாநிலமாக இருந்தாலும், மொத்தம் நான்கு லட்சம் அரசு ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்துவருகின்றனர்.
பல கோரிக்கைகள் இருந்தாலும், பழைய ஓய்வூதிய திட்டத் தை செயல்படுத்த வேண்டும் என்பது அவர்களின் முக்கிய மான கோரிக்கை. ஆனால், பாஜகவோ அதை ஏற்பதாக இல்லை. அரசு ஊழியர்கள், வேலைகிடைக்காத இளைஞர் களின் வாக்கு யாருக்கு என்பதும் உற்று கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது.
தந்தி டிவி செய்திகளுக்காக குஜராத்திலிருந்து செய்தியாளர் சங்கரன்.