சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த நாராயணி என்ற பெண், கொரட்டூரில் உள்ள தனது 78 சென்ட் இடத்தை விற்பதற்காக, ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளர் மிண்ட் ரமேஷ் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், நல்ல விலைக்கு வந்ததால், வேறு நபரிடம் நிலத்தை விற்றுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மிண்ட் ரமேஷ், அவரது கூட்டாளி நாகர்கோவில் மகேஷ் ஆகியோர், நாராயணியின் வீட்டிற்குள் புகுந்து, 45 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறுப்படுகிறது. இதுதொடர்பாக நாராயணி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், கடந்த திங்களன்று மிண்ட் ரமேஷ் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்பு அவரை வழி அனுப்பி வைத்து விட்டு வீடு திரும்பிய மிண்ட் ரமேஷை, கொரட்டூர் போலீசார் கைது செய்தனர். மேலும், கூட்டாளியான நாகர்கோவில் மகேஷையும் போலீசார் கைது செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.