ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் - தெற்கு ரயில்வே

Update: 2023-02-24 11:54 GMT

பல்வேறு ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணச் சீட்டு பெறுவதற்காக தற்போது 99 தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளன.

இந்நிலையில், கூடுதலாக 254 தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. இதில், சென்னை மண்டலத்தில் 96, திருச்சி மண்டலத்தில் 12, மதுரை மண்டலத்தில் 46, சேலம் மண்டலத்தில் 12 மற்றும் எஞ்சிய 88 இயந்திரங்கள் திருவனந்தபுரம் பாலக்காடு மண்டலத்தில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுவப்பட உள்ளன.

இந்த இயந்திரத்தில் ஸ்மார்ட் கார்டு, யுபிஐ செயலி மூலம் பயணச்சீட்டு பெறலாம். மேலும், மாதாந்திர மற்றும் காலாண்டு சீசன் டிக்கெட்டுகளை புதுப்பிக்கலாம்.

ஆர்-வேலட் மூலம் பயணச்சீட்டு பெறுபவர்களுக்கு 3 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பயணச் சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் இயந்திரத்தில் இடம் பெற்றுள்ளதால் பயணிகள் எளிதாகப் பயன்படுத்தலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இருப்பினும் ஏடிவிஎம் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு கற்பிக்கப்பட்டால் மேலும் உதவியாக இருக்கும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்