செல்போன் டார்ச் அடித்த இளைஞர்கள்.. ஆவேசமடைந்த அரவிந்த் கெஜ்ரிவால்
குஜராத்தில் ஊழல் செய்த அமைச்சர்களை ஜெயிலுக்கு அனுப்புவோம் என, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் நகரில், 6 தொகுதிகளின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞர்கள், செல்போனில் டார்ச்சை ஆன் செய்து, அரவிந்த் கெஜ்ரிவாலை வரவேற்றனர். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கெஜ்ரிவால், குஜராத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆண்ட போதும், சொல்லக் கூடிய அளவிற்கு வளர்ச்சி ஏதும் இல்லை என்றும், மத்திய அரசின் தவறான நடவடிக்கையால், ஜவுளி மற்றும் வைரம் பட்டை தீட்டும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் அரசு பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு பல்வேறு இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அவர், இதன் மூலம் தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் செல்வது தடுக்கப்படும் என்று கூறினார். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்த அமைச்சர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் ஆவேசமாக தெரிவித்தார்.