பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி 100 கோடி இந்தியர்களை சென்றடைந்து இருப்பதாக ஐஐஎம் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடி, தனது எண்ணங்களை நாட்டு மக்களோடு பகிர்ந்துகொள்ளும் மனதில் குரல் நிகழ்ச்சி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. வரும் 30ஆம் தேதி 100-வது அத்தியாயத்தை தொட உள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து ஹரியானாவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனமான ஐஐஎம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதன் முடிவை பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி கௌரவ் திவேதி மற்றும் ஐஐஎம் நிறுவனத்தின் இயக்குநர் தீரஜ் பி.சர்மா ஆகியோர் வெளியிட்டனர். அதில், 100 கோடி மக்களை மனதின் குரல் நிகழ்ச்சி சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி, பிரஞ்சு, சைனீஸ், இந்தோனேஷியன், திபெத்தியன் உட்பட 11 அயல்நாட்டு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.