சிறையிலிருந்து வெளிவந்த 5 மணி நேரத்தில் ஆட்டோ ஓட்டுநரை ஓடஓட வெட்டி கொலை - சென்னையில் பயங்கரம்
சென்னை கிண்டியில் ஆட்டோ ஓட்டுனர் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான வெறி தினேஷ் என்பவரை, கிண்டி பகுதியில் இரண்டு ரவுடிகள் பட்டா கத்தியுடன் துரத்தியுள்ளனர். இதனையடுத்து தினேஷ் மளிகை கடைக்குள் புகுந்த நிலையில், கடைக்குள்ளேயே அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். ரவுடிகள் உள்ளே புகுந்ததும் கடையின் உரிமையாளர், ஷட்டரை மூடி பூட்டியதால், கடைக்குள்ளேயே சிக்கிக்கொண்ட கொலையாளிகளை போலீசார் பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். முதற்கட்ட விசாரணையில், கொலையான தினேஷ் சிறையில் உள்ள ரவுடி ராபினின் கூட்டாளி என்பது தெரியவந்தது. ராபினின் மற்றொரு கூட்டாளியான குணா ஆதம்பாக்கத்தில் தாதவாக வலம் வர விரும்பியதும், அதுதொடர்பாக தினேஷ் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், குணா தனது கூட்டாளிகளை அனுப்பி தினேஷை கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் கொலையாளிகள், தினேஷை கொலை செய்வதற்கு 5 மணி நேரத்திற்கு முன்புதான், சிறையிலிருந்து வெளியே வந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குணாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.