நாமக்கல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் பூபதி, மோகனூர் சாலையில் உள்ள திருநகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு காலை 7 மணியளவில் வந்த லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷினி தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் மல்லசமுத்திரம் ஒன்றியம் கீழ்முகம் கிராமத்தில் பூபதியின் தந்தை தங்கவேலுக்கு சொந்தமான வீட்டிலும், வெண்ணந்தூர் அருகே உள்ள கல்கட்டானூர் பகுதியில் வசித்து வரும் பூபதியின் மாமனார் செங்கோட்டையன் வீட்டிலும் செவ்வாய்க்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். நாமக்கல் வீட்டில் காலையில் தொடங்கிய இந்த சோதனை மாலை ஆறரை மணிக்கு முடிவடைந்தது. கடந்த 2018-ம் ஆண்டில் ராசிபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பூபதி பணியாற்றியபோது வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அந்தப் புகார்களின் அடிப்படையில்,லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனையின் போது கணக்கில் வராத ஒரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாயும், முக்கிய ஆவணங்களும் சிக்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.