29 நிமிடத்தில் 62 செய்திகள்...காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (05.07.2023)

Update: 2023-07-05 03:48 GMT

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டப்போவதாக சொல்லும் இடம், தமிழ்நாட்டிற்கு சொந்தம் என்றும், அங்கு அணை கட்ட முடியாது எனவும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிடுமாறு காவிரி மேலாண்மை வாரியத்திடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கையும் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது. உறுப்பினர் சேர்ப்பு பணியினை துரிதமாக முடிக்க இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்படவுள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள், ஆகஸ்டு மாதம் மதுரையில் நடத்தப்படவுள்ள மாநாடுக்கான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய கூட்டத்தின் முடிவில், மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக போராட்டம் நடத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா, இட ஒதுக்கீட்டில் கையெழுத்திடவில்லை என்றால், எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என திமுக எம்.பி, ஆ.ராசா கேள்வி எழுப்பினார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், கருணாநிதியின் பேனாவுக்கு சிலை வேண்டாம் என்று சொல்வதில் என்ன நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்..

அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக கைது செய்ததாகக் கூறி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்ட நிலையில், நீதிபதி பரத சக்கரவர்த்தி, செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவு சட்டவிரோதமல்ல என்று உத்தரவிட்டார். இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக, வழக்கை 3வது நீதிபதியின் விசாரணைக்கு அனுப்ப, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்