29 நிமிடத்தில் 59 செய்திகள் | காலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News | Thanthi News (03.07.2023)
சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு 5 ரூபாய் குறைந்து 95 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் கிலோவுக்கு 120 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் 80 ரூபாய்க்கும், பீன்ஸ் விலை கிலோவுக்கு 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதே போல், இஞ்சி விலை கிலோவுக்கு 200 ரூபாய்க்கும், பூண்டு 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..
மேகதாதுவில் அணை கட்டுவது என்பது ஒரு போதும் நடக்காது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேகதாது விவகாரத்தில் ஆட்சியாளர்கள் மெளனம் சாதிப்பதாக தெரிவித்த அவர், தமிழகத்திற்கான நீரை கர்நாடகா முறையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேகதாது அணை விவகாரத்தில் முடிவு செய்ய வேண்டியது காவேரி மேலாண்மை வாரியமும், மத்திய அரசும் தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். டி.கே.சிவக்குமாரின் கருத்து அவரது தரப்பில் இருந்து பார்த்தால் நியாயம் எனவும், தேர்தல் வாக்குறுதியின்படி மேகதாது அணை கட்டுவோம் என்று கூறுவதாகவும் தெரிவித்தார். அதே போல், மேகதாது அணை கட்டக் கூடாதென்பது நமது தரப்பு நியாயம் எனவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் ஒன்றிய அரசின் கையில் உள்ளது என்று கூறிய திருமாவளவன், ஒன்றிய அரசின் கவனத்திற்கு தமிழக முதல்வர் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்..
போக்குவரத்து துறையில் ஊழியர்கள் ஓய்வு பெறும்போது பி.எஃப், கிராஜுவிட்டி மறுக்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டூரில், படுகொலை செய்யப்பட்ட வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் காளியின் உருவப் படத்தை திறந்து வைத்த அவர், முக்கிய குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் எடுத்த முடிவு சட்டத்தின்படி தவறு என்றும், தார்மீக அடிப்படையில் சரி என்றும் தெரிவித்தார்.