29 நிமிடத்தில் 54 செய்திகள் | காலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News | Thanthi News (02.07.2023)
சென்னையில் தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கோயம்பேடு சந்தையில், மொத்த விற்பனையில் 100 ரூபாய்க்கும், சில்லறை விலையில் 130 முதல் 140 ரூபாய் வரையிலும் தக்காளி விற்பனையாகிறது. கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து வருவதால் கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், நிறுத்தப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட வீரக்கல், பெரிய சோரகை கிராமங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு, வாக்களித்த மக்களை மறந்து விட்டார் என்று குற்றம் சாட்டினார். முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்தி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அரசும், தனியாரும் இணைந்து செயல்படுவதன் காரணமாக, மருத்துவ கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக, அமைச்சர் மா. சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்தார். இந்திய அளவில், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டங்கள் பேசப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
தமிழக ஆளுநர் தன்னை பிரிட்டிஷ் காலத்து கவர்னர் போல் நினைத்து நடந்து கொள்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். ஜனநாயக படுகொலையை நடத்தி பார்க்க ஆளுநர் நினைப்பதாகவும், ஆளுநரின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது என்றும் வைகோ தெரிவித்தார். சனாதனம் என்பதே கிடையாது என்று கூறிய அவர், இந்தியா என்ற நாடே முதலில் கிடையாது என்றும், பல நிலப்பரப்புகளை ஒன்றாக்கி நாடாக மாற்றியது வெள்ளைக்காரர்கள் தான் என்றும் கூறினார்.