35 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம்..அதிர்ச்சியடைந்த விவசாயி - கராராக பேசிய அதிகாரிகள்
செஞ்சியை அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கவேலு, தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அவர், கடந்த 10 ஆண்டுகளாக, ஒவ்வொரு முறையும் சராசரியாக ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை மின்கட்டணம் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், இந்த மாதம் மின் கட்டணமாக 35 ஆயிரத்து 400 ரூபாய் கட்ட வேண்டும் என்று மின்சாரத் துறை ஊழியர்கள் கூறியதால் அதிர்ச்சி அடைந்த தங்கவேலு, அனந்தபுரம் மின் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது, மின் இணைப்பு பெற்றதில் இருந்து பயன்படுத்திய மின்சாரத்திற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மாதந்தோறும் மின்கட்டணத்தை தவறாமல் செலுத்தி வந்ததாக தங்கவேலு கூறியபோதிலும், மின்வாரிய அதிகாரிகள் கராராக உள்ளனர். இதனால் மன வேதனைக்கு ஆளாகி இருக்கும் தங்கவேலு குடும்பத்தினர், தங்களுக்கு நியாயம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.