4 மாடிகளில் 10 மணி நேரம் பகீர் தந்த பட்சி... அபார்ட்மென்ட்டில் 5 பேரை கடித்து குதறியது... 100 பேர் வந்தும் சமாளிக்க முடியாமல் திணறல்

Update: 2022-11-26 10:53 GMT

மகாராஷ்டிர மாவட்டம், மும்பையை அடுத்த தானே மாவட்டத்தில், கிழக்கு கல்யாண் பகுதியில் வியாழக்கிழமை காலை வழக்கம்போலத்தான் விடிந்தது. சின்ச்பாதா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளுக்கோ அப்படி அமையவில்லை. காலை 8.30 மணிக்கு அந்த நான்கு மாடிக் கட்டத்தில் திடீரென ஒரு சிறுத்தைப்புலி புகுந்தது.

முதல் மாடியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் கதவுக் கண்ணாடி வழியாக சிறுத்தையைப் பார்த்து, அலறியிருக்கிறார்கள். சிறிது நேரத்தில் மொத்தக் குடியிருப்புமே அச்சத்தில் உறைந்துபோனது.

ஆனாலும் அதன் வருகையை அறியாத மூன்று பேர், சிறுத்தைப்புலியின் தாக்குதலுக்கு ஆளானார்கள். 38 வயது ராஜீவ்பாண்டே என்பவருக்கு சிறுத்தைப்புலி கடித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தன்னுடைய அறையைவிட்டு வெளியே வந்த 85 வயது ராமா சிங், அடுக்ககத்துக்கு அருகில் உள்ள 70 வயது மனோகர் கெய்க்வாட் ஆகியோரும் சிறுத்தைப்புலியால் தாக்கப்பட்டனர். வலது காலில் படுகாயம் அடைந்த கெய்க்வாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மும்பை சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள் என வனத்துறையினரும், காவல்துறை, மீட்புப்பணி துறையினருமாக, 100 பேர் ஒரு மணி நேரத்தில் வரவழைக்கப்பட்டனர்.

கடும் நெரிசலான சாலைக்கு அருகில் உள்ள பகுதி என்பதால், அந்த வட்டாரத்தில் போக்குவரத்து முதலில் மட்டுப்படுத்தப்பட்டது.

பிறகு, அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளவர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது.

டிரோன் கேமிரா மூலம் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தைக் கண்காணித்தபடியே, அந்தக் கட்டடத்தின் நான்காவது மாடியில் வனத்துறைக் குழுவினர் இறக்கப்பட்டனர்.

வலைகள், கூண்டு சகிதமாக அவர்கள் தயாராக இருந்தனர்.

ஒவ்வொரு தளமாக மேலும் கீழும் பக்கவாட்டிலும் தாவித்தாவி அந்தச் சிறுத்தைப்புலி அவர்களுக்கு போக்கு காட்டிக்கொண்டு இருந்தது.

ஒருவழியாக, மாலை 6 மணிவாக்கில் கால்நடை மருத்துவர்கள் அதற்கு மயக்க ஊசியை துப்பாக்கியால் செலுத்தி, விழவைத்தனர்.

ஆனாலும், பிடிபடுவதற்குமுன், மீட்புப் பணியில் ஈடுபட்ட குழுவினரில் இரண்டு பேரைத் தாக்கி, சிறுகாயங்களை உண்டாக்கியது.

17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹாஜிமலாங் வனப் பகுதியிலிருந்தே இந்த சிறுத்தைப்புலி வந்திருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மூன்று ஆண்டுகளாக பட்லாப்பூர், உல்சாநகர், கல்யாண் பகுதிகளில் அவ்வப்போது சிறுத்தைப்புலி நடமாடுவதாகவும், மக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்