1 போனுக்காக ஒட்டுமொத்த நீரையும் வெளியேற்றிய அடாவடி அரசு அதிகாரி.. இவ்ளோ பண்ணியும் கடைசியில் போன் வைத்த ஆப்பு

Update: 2023-05-27 04:56 GMT

நீர்த்தேக்கத்தில் விழுந்த செல்போனை எடுக்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி வீணாக்கிய அவலத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு....

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளில் குடிக்க கூட நீரின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உலக அளவில் பாதிக்கும் அதிகமான பிரதான ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் சுருங்கி வருவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

நிலமை இப்படி இருக்க, ஒரே ஒரு செல்போனுக்காக ஒரு நீர் தேக்கத்திலிருந்த ஒட்டுமொத்த தண்ணீரையும் வெளியேற்றி மக்களை வெறியேற்றியிருக்கிறார் சத்தீஸ்கர் மாநில அரசு அதிகாரி.

ஆம், சத்தீஸ்கர் மாநிலம், பகஞ்சூர் பகுதிக்கு சுற்றுலா வந்த உணவுத்துறை ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸ், அங்குள்ள மிகப்பெரிய ஏரியான கெர்கட்டா பர்கோட் நீர்தேக்க பகுதியில் நின்று இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கையில் வைத்திருந்த செல்போன் தவறி நீர் தேக்கத்தில் விழுந்தது. அந்த செல்போனின் மதிப்பு ஒரு லட்சம் என்று கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ராஜேஷ் விஸ்வாஸ் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அங்கிருந்த ஊழியர்களை அழைத்து எப்படியாவது செல்போனை மீட்க வேண்டும் என்று கூறியவர், அதற்காக நீர் தேக்கத்திலிருந்து ஒட்டுமொத்த தண்ணீரையும் வெளியேற்ற உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த மூன்று நாட்களாக இரவு பகலாக தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்தது. ராட்சத மோட்டார்கள் மூலம் சுமார் 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி செல்போனை மீட்டனர் ஊழியர்கள்..

அதிகாரியின் செயலால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்ட 21 லட்சம் தண்ணீரைக் கொண்டு சுமார் 1,500 ஏக்கர் நிலத்துக்கு பாசனம் அளித்திருக்க முடியும் என்றும், அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.

சமூக வலைதளங்கள் மூலம் தண்ணீர் சம்பவம் தீயாய் பரவ விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. உடனடியாக களமிறங்கிய மாவட்ட நிர்வாகம் விசாரணையை தீவிரப்படுத்தியது.

விசாரணையில் ராஜேஷ் விஷ்வாஸ் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றதாக ஊழியர்களிடம் பொய்யான தகவலை கூறி தண்ணீரை வெளியேற்றியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராஜேஷ் விஷ்வாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதில் சுவாராஸ்யம் என்னவென்றால், இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் நீர்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்ட செல்போன் இனி உபயோகிக்க முடியாது என்பது தான்.

Tags:    

மேலும் செய்திகள்