``கொழந்த, குட்டி எல்லாம் விழுந்து சாவுது சார்...'' ``தயவு செஞ்சி வந்து பாருங்க சாமி..'' பிள்ளைகளோடு உயிரை கையில் பிடித்து வாழும் நரிக்குறவ மக்கள்

Update: 2024-08-13 15:35 GMT

விழுப்புரத்தில், இடிந்து விழும் சூழலில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் எவ்வித அடிப்படை வசதியின்றி கழிவுநீருக்கு மத்தியில் தவித்து வரும் நரிக்குறவர் மக்களின் வேதனையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

விழுப்புரம் நகராட்சியில் ஒன்றாவது வார்டான ஆஷா குளம் பகுதியில் ஏராளமான நரிக்குறவ இன மக்கள் வசித்து வருகின்றனர்..

இவர்களுக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்தது அப்போதைய அரசு. அப்போது முதல் அந்த தொகுப்பு வீடுகளில் நரிக்குறவ இன மக்கள் வசித்து வரும் சூழலில், தற்போது அக்குடியிருப்பு வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் சூழலில் உள்ளது...

இப்படி திக் திக் சூழலில் வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதி மற்றொரு தலைவலியாக உள்ளது..

ஆஷா குளம் பகுதியில் வடிகால் வசதியில்லாததால், சிறு மழைக்கே குடியிருப்பு பகுதிகளை சுற்றி கழிவுநீர் தேங்கி பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் மக்கள்....

விழுப்புரம் சட்டக் கல்லூரியில் இருந்து வெளியேறும் தண்ணீரும் மேல்பகுதியில் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீரும் கழிவு நீர் கலந்து இந்த நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் வந்து தேங்கி நிற்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்

இந்த கழிவுநீருடனே அன்றாடம் வாழப் பழகிக் கொள்ள வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள், விஷ ஜந்துக்களின் தொல்லைக்கு நடுவில் பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவதிப்படுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்..

அத்துடன் இப்படிப்பட்ட சுகாதாரமற்ற சூழலால், தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதால், எப்போதும் பீதியுடன் இருக்க வேண்டிய சூழலே உள்ளது என்கிறார்கள்...

அதுவும் கடந்த 5 ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் மக்கள் கூறுகையில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பலமுறை புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என்பது இம்மக்களின் புலம்பலாக உள்ளது..

ஊசி மணி, பாசி மணி விற்று பிழைப்பு நடத்தி வரும் தங்களுக்கு, 3 வேளை உணவு உண்பதே திண்டாட்டமாக உள்ள நிலையில், இருப்பிடத்தின் அவலநிலையையும் கண்டு புலம்பி தள்ளுகின்றனர்.

சிறு மழைக்கே தண்ணீர் தேங்கும் சூழலில், இன்னும் பருவமழையின் போது என்ன கதி என கலங்கும் மக்கள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகின்றனர்.

இது மட்டுமன்றி உரிய சாலை வசதியும், குடிநீர் வசதியும் கூட இப்பகுதி வாசிகளுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதும் குற்றச்சாட்டாக உள்ளது.

அடிப்படை தேவைகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமல் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கும் மக்கள், தங்கள் வாழ அரசாங்கமே உதவ வேண்டும் என வேதனையோடு கோரிக்கை விடுக்கின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்