அது மட்டுமே மொத்தம் 3 டன்னாம்.. மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்திய விஜய்க்கு இது தெரியுமா?
த.வெ.க. மாநாட்டிற்கு பிறகு, வி.சாலை பகுதியில் இருந்து டன் கணக்கில் குப்பைகள் அகற்றப்பட்டிருக்கின்றன.
விக்கிரவாண்டி வி.சாலையில் நடந்த த.வெ.க. மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் அலைகடலென திரண்டு வந்திருந்தனர்..
மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட்டுகள், சாப்பாடு பொட்டலங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன..
விஜய்யின் அரசியல் வரலாற்றின் தொடக்கமான இந்த த.வெ.க. முதல் மாநாட்டில் விஜய்யின் அனல் பறந்த அரசியல் பேச்சு அங்கிருந்த தொண்டர்களை குஷிப்படுத்தி இருந்தது..
அதேநேரம் மாநாட்டு திடல் முழுவதும் எங்கு பார்த்தாலும் உடைந்து நொறுங்கிய நாற்காலிகள், தூக்கி வீசப்பட்ட காலி குடிநீர் பாட்டில்கள் என ஒரே குப்பை மேடாக காட்சியளித்தன..
85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மட்டுமின்றி திடலுக்கு வெளியேயும் குப்பைகள் பரவிக்கிடந்தன.
தொண்டர்கள் விட்டுச்சென்ற கட்சி கொடிகள், துண்டுகள், பேட்ஜ்கள் மற்றும் காலி குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், உணவுப் பொட்டல கழிவுகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பைகள் என சுமார் 3 டன் அளவில் குப்பைகள் கிடந்தன.
இப்படி குவிந்திருந்த குப்பைகளால் த.வெ.க. மாநாட்டு திடலே ஏதோ ஒரு குப்பை மேடாக தோன்றியது.. இதனால், தூக்கி எறியப்பட்ட உணவுப் பொருட்களாலும், அப்பகுதியில் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது.
கூட்டத்தில் மொத்தமாக 1,000-க்கும் அதிகமான நாற்காலிகள் உடைக்கப்பட்டு இருப்பதாகவும் விழாவிற்கு நாற்காலிகள் வழங்கிய தனியார் நிறுவனம் கூறி இருக்கிறது..
சுமார் 25 கி.மீ.-க்கு தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களிலும் வழிநெடுகிலும் குப்பைகள் ஆங்காங்கே பரவிக்கிடந்தன.
இதையெல்லாம், சுத்தம் செய்யும் பணியில் மாநாட்டு குழுவினர், கூலித் தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் பெரிய பெரிய சாக்கு பைகளில் அள்ளும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்..