நாம் தமிழர் கட்சியினரின் அவதூறான பதிவுகளை நீக்கக் கோரி, திருச்சி எஸ்.பி. வருண்குமார் மனு தாக்கல் செய்த நிலையில், மத்திய அரசு மற்றும் எக்ஸ் வலைதளம் பதிலளிக்க, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வருண்குமார் தாக்கல் செய்த மனுவில், தொடர்ந்து தன்னை இழிவுபடுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவுகள் வெளிவந்ததால்,
கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி திருச்சி தில்லைநகர் போலீசில் மீண்டும் புகார் கொடுத்ததாகவும், பெயர் தெரியாத 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
திருச்சி தில்லைநகர் போலீசார் கேட்ட தகவல்களை தருமாறு எக்ஸ் கார்ப்பரேசனுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தனது புகார் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்குமாறு திருச்சி தில்லைநகர் போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது. புகார் குறித்து விளக்கம் கேட்டு பதில் அளிக்க மத்திய அரசு தரப்பில், கால அவகாசம் கோரப்பட்டது.
எக்ஸ் தள கணக்குகள் தொடங்கும்போது ஆதார் கட்டாயமாக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
மனுதாரர் புகார் குறித்து மத்திய அரசு, எக்ஸ் வலைதள பொறுப்பு அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.