விசாரணையை தொடங்கிய தமிழக அரசு... உயர்கல்வி வட்டாரத்தில் பரபரப்பு | TN Govt
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நிதி முறைகேடு புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில்,
நிதிப் பரிவர்த்தனை தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆறுமுகம் என்பவர் பதவியேற்றத்தில் இருந்து, பல்வேறு விதிமீறல் மற்றும் நிதி முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள், அலுவலக பணியாளர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். 12 பக்கங்களைக் கொண்டுள்ள அந்த புகார் மனுவில், துணைவேந்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. 14-வது பட்டமளிப்பு விழாவை காரணம் காட்டி, 10 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும்,
சென்னையில் உள்ள பல்கலைக்கழக வளாகம் மற்றும் விழுப்புரம் மண்டல வளாகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியதில் பல முறைகேடுகள் நடந்ததாகவும், 6 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பல்கலைக்கழகத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் நடந்த நிதிப் பரிவர்த்தனை தொடர்பாக, தமிழக அரசு விசாரணை நடத்தி வருவதாக வெளியான தகவல் உயர்கல்வி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.