ஒற்றை கடிதத்தால் மூதாட்டியை வீடு புகுந்து தாக்கிய காவலர் - தூத்துக்குடி அருகே பரபரப்பு

Update: 2024-07-19 08:39 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, முதல்வரின் தனிப்பிரிவில் புகாரளித்ததால் மூதாட்டி ஒருவரை பெண் காவலர் வீடு புகுந்து தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அனவரத நல்லூரை சேர்ந்தவர் முத்துரத்தினம். மாற்றுத்திறனாளியான இவர், தன் கணவரை இழந்த நிலையில், இரு பிள்ளைகளுடன் தனியே வசித்து வந்தார். இந்நிலையில், முத்துரத்தினத்தின் மகனான பால்துரை, கடந்த மார்ச் மாதம் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி மயங்கி விழுந்ததாகவும், அப்போது அவரிடம் இருந்து கையெழுத்தை பெற்று மகனின் உடலை போலீசார் அடக்கம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட சிவந்திப்பட்டி காவல்நிலையத்தில் தனது மகளுடன் சென்று விளக்கம் கேட்ட முத்துரத்தினத்திற்கு, காவல்துறை முறையாக பதில் அளிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, மகனின் இறப்பு சான்றிதழை தற்போது வரை வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக கூறிய மூதாட்டி, இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவில் புகாரும் அளித்திருக்கிறார். இந்நிலையில், முதல்வரின் தனிப்பிரிவில் புகாரளித்ததால், தனது வீட்டிற்கு வந்த பெண் காவலர் ஒருவர், எதற்காக முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகாரளித்தீர்கள் எனக்கூறி தன்னை தாக்கிச் சென்றதாக புகாரளிக்கப் பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து, நெஞ்சு வலிப்பதாக கூறி மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்