தென்னகத்தை புரட்டிப்போட்ட வெள்ளம்-அந்தரத்தில் தொங்கிய ரயில் பாலம்-"நாளை முதல்"-வெளியான முக்கிய தகவல்
திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் தண்டவாள சீரமைப்பு பணி 99 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பாசஞ்சர் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை - வெள்ளம் காரணமாக, திருநெல்வேலி -திருச்செந்தூர் ரயில் தண்டவாளத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லி கற்கள் அரித்து, தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியது. இதனால் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், 800க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட சம்பவமும் நிகழ்ந்தது. இந்தநிலையில், சேதமடைந்த ரயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் பணி, 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டி, திருச்செந்தூரில் நிறுத்தப்பட்டிருந்த பாசஞ்சர் ரயிலானது டீசல் எஞ்சின் மூலம், சோதனை ஓட்டமாக திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டது. நாளை முதல் திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதையில், பயணிகள் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.