7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் எந்தவொரு கட்டணமும் வசூலிக்கக் கூடாது என, மருத்துவக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு முடிந்து, பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் பலர், சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை உத்தரவு பெற்றுள்ளனர். இந்நிலையில், அனைத்து தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு, மருத்துவக்கல்வி இயக்குநர் சாந்தி மலர், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்கீழ் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களிடம் நூலகம், விடுதி, உணவு உட்பட எந்தவொரு கட்டணமும் வசூலிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்பதாகவும், கட்டணம் வசூலிப்பது குறித்து புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.