கம்ப்யூட்டர் பிரிவுகள் மீது மாணவர்களுக்கு மோகம் - சூடுபிடிக்கும் மாணவர் சேர்க்கை
பொறியியல் படிப்பில் சேருவதற்கு பொதுப் பிரிவு முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வில், அதிகப்படியான மாணவர்கள் கம்ப்யூட்டர் சார்ந்த பாடப்பிரிவை தேர்வு செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு, ஆன்லைன் மூலம் 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. அதில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வும் முடிந்துள்ளன. இதில் 16 ஆயிரத்து 516 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், 10 ஆயிரத்து 716 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 4 ஆயிரத்து 712 பேர் கம்ப்யூட்டர் சார்ந்த பாடப்பிரிவையும், 2 ஆயிரத்து 848 பேர் எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவையும், ஆயிரத்து 883 பேர் தகவல் தொழில்நுட்பப் பிரிவையும் தேர்வு செய்துள்ளனர். தமிழ் வழியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் பாடப்பிரிவினை ஒரே ஒரு மாணவரும் தேர்வு செய்துள்ளார். 93 பாடப்பிரிவுகள் உள்ள நிலையில், கம்ப்யூட்டர் சார்ந்தப் பாடப்பிரிவுகளை மட்டுமே மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.