நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெற நடிகை விஜயலட்சுமி இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. ஆனால் நீதிபதி விடுமுறை என்பதால், வழக்கு விசாரணை அக்டோபர் 6-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.