சாத்தான்குளம் காட்டில் திடீரென தரையிறங்கிய மர்ம ஹெலிகாப்டர்.. பீதியில் மக்கள்.. பின்னணி என்ன?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அரசின் அனுமதி இன்றி ஹெலிகாப்டர் தரை இறங்கிய விவகாரம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்... இதுகுறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் தாமோதரனிடம் கேட்கலாம்...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலசேரி கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை மர்மமான முறையில் ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கி அதிலிருந்து இறங்கிய நபர்கள் சொகுசு கார் மூலம் அந்த பகுதியில் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்த ஒரு செட்டுக்குள் சென்று தனியார் நிறுவனம் ஒன்றை அமைப்பதற்காக சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் இந்தியா மற்றும் அமெரிக்கா நாட்டின் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தது. மேலும் அந்த பகுதியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் புகைப்படம் பொறிக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
ஹெலிகாப்டர் வந்து இறங்கியது தெரிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் அந்த பகுதிக்கு ஓடோடி வந்தனர். மேலும் இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் சம்பந்தமில்லாமல் தங்கள் பகுதிக்குள் ஹெலிகாப்டர் வந்து தரையிறங்கியதால் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகினர். இந்த சம்பவம் தொடர்பாக கட்டாரிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் எந்தவித அரசு அனுமதி இன்றி மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இன்றி அந்தப் பகுதியில் ஹெலிகாப்டர் வந்து தரை இறங்கியது, அந்தப் பகுதியில் அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்தது, மேலும் எந்தவித அரசு அனுமதியும் இன்றி அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரின் தனிப்பட்ட புகைப்படத்தை அந்த விளம்பர பேனரில் வைத்தது குறித்து விசாரனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. புகாரை பெற்றுக் கொண்ட சாத்தான்குளம் காவல்துறையினர் அந்த புகார் மனு மீது புகாரை பதிவு செய்து சி.எஸ்.ஆர் போட்டு வழங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் சாத்தான்குளம் அருகே நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் ஒன்று மர்மமான முறையில் வந்து தரையிறங்கி சென்றது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இது தொடர்பாக வருவாய் துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் மீண்டும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.