7 ஆண்டுகளில் `6; குழந்தைகள்- விற்பதற்காகவே அடுத்தடுத்து பெற்ற அதிர்ச்சி..! தமிழகத்தை உலுக்கிய தம்பதி
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே 7 ஆண்டுகளில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி, அந்தக் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள திம்மபொதியான்வளவு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேட்டு- குண்டுமல்லி தம்பதிக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கெனவே 5 குழந்தைகள் பிறந்து, அவற்றில் 2 குழந்தைகள் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த தம்பதிக்கு 15 நாட்களுக்கு முன்பு, 6-ஆவதாக ஆண் குழந்தை பிறந்ததால், சித்தூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் சிகிச்சை அளிக்க அவர்களின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது தம்பதி மட்டுமே வீட்டில் இருந்ததை கண்டு, குழந்தை பற்றி செவிலியர்கள் கேட்டதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே, சேலத்தை சேர்ந்த தேவேந்திரன் என்பவர், சேட்டு- குண்டுமல்லி தம்பதியினரின் ஆண் குழந்தையை தத்தெடுக்க போவதாக கூறி, அதற்குண்டான வழிமுறைகளை சேலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர், எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, 15 நாட்களுக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தையை அந்த தம்பதி விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து முதல் கட்டமாக, குழந்தையின் தந்தை சேட்டு, தரகர்களாக செயல்பட்ட முனுசாமி, செந்தில் முருகன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
குழந்தையை பெற்றெடுத்த தாய் குண்டுமல்லி சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவரை சேலத்திலுள்ள மனநல காப்பகத்தில் சேர்த்தனர். அவர் 6-ஆவதாக பெற்றெடுத்த ஆண் குழந்தையை குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்தனர்.
மேலும், குழந்தை விற்பனைக்கு இடைத்தரகர்களாக தமிழ்செல்வன், லோகாம்பாள், பாலாமணி என மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமான 7 ஆண்டுகளில், 6 குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி, அவர்களை தத்து கொடுப்பதாக கூறி விற்பனை செய்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.