விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, உயர்நீதிமன்றம் வகுத்த விதிமுறைகளுக்குட்பட்டு அனுமதி கேட்ட போதிலும், அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில், அனுமதி கோருல் பல இடங்களில் மாற்று தேதி மற்றும் மாற்று வழித்தடம் குறிப்பிடவில்லை எனவும், அணிவகுப்பில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறித்த பல்வேறு தகவல்கள் வழங்கப்படவில்லை எனவும் காவல்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டது. மேலும், கூடுதல் தகவல்கள் வழங்கும்பட்சத்தில் அனுமதி அளிக்க பரிசீலிக்கப்படுமென காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை கோரும் தகவல்களை வழங்க மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.