சென்னையில், பிரபல பால் நிறுவனத்தில் 65 லட்சம் ரூபாயை நூதன முறையில் மோசடி செய்த ஊழியர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாதவரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பிரபல பால் நிறுவன மேலாளர் முகமது தமிமுல் அன்சாரி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், பால் விநியோகம் செய்யும் நபர்கள், தங்கள் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் செய்து பெட்ரோகார்டு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு தனது நிறுவனத்தில் சேர்ந்த ராய் ஜோஸ் என்பவர், பெட்ரோ கார்டு பயன்படுத்தும்போது கிடைக்கும் ரிவார்ட் பாயிண்ட்களை நூதன முறையில் மோசடி செய்து பணத்தை திருடியதாக கூறப்பட்டுள்ளது. சுமார் 65 லட்சம் ரூபாய் அமேசான், பிளிப்கார்ட் வவுச்சர்களாகவும், விமான டிக்கெட்டுகளாகவும் மாற்றி மோசடி செய்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராய் ஜோஸ் ராஜினாமா செய்த பின்னரும், அருண் செல்வகுமார் என்ற மற்றொரு மேலாளர் மூலம் மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில், ராய் மற்றும் அருண் செல்வகுமார் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.