சடலத்தோடு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென போராட்டத்தில் குதித்த உறவினர்கள் - உச்சகட்ட பரபரப்பில் சேலம்
சேலம் அருகே இறந்தவரின் சடலத்தை புதைக்க இடம் கேட்டு மறியலில் ஈடுபட்டவர்களை, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
சேலம் மாவட்டம் மாசநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்களின் சடலத்தை புதைப்பதற்கு உரிய இடம் இல்லையென கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் இறந்ததால், அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் மயானத்தில் இடமில்லாததால் அதிருப்தியடைந்த உறவினர்கள், திடீரென சடலத்துடன் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. பிரதான சாலை என்பதால், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து தடியடி நடத்தி, சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைத்தனர். 5க்கும் மேற்பட்டோரையும் கைது செய்தனர். பின்னர் இறுதிச்சடங்கு செய்து சடலத்தை அடக்கம் செய்யுமாறு அறிவுறுத்திய போலீசார், போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.