கலெக்டர் அலுவலகம் முன் ஒன்று கூடிய கூட்டம்...மூடப்பட்ட கதவு - புதுக்கோட்டையில் பரபரப்பு
புதுக்கோட்டையில் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து மணிப்பூர் ஒருமைப்பாடு மக்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்திய அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திமுக, அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கிறிஸ்தவம், இஸ்லாமியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சின்னப்பா பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் சின்னப்பா பூங்காவில் இருந்து பேரணியாக மனு அளிக்க ஆட்சியர் அலுவலகம் சென்றனர். உள்ளே நுழைய முற்பட்டபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலர் கீழே விழுந்த சம்பவங்களும் அரங்கேறின. தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாக கதவு மூடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தொடர்ந்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து போயினர். தொடர்ந்து நிர்வாகிகள் 5 பேர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மணிப்பூர் கலவரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்து சென்றனர். பேரணியில் நடந்து வந்தவர்களுக்கு கால் சுடாமல் இருக்க வழிநெடுகிலும் சாலையில் லாரி மூலமாக தண்ணீர் ஊற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.