தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நெல் வியாபாரிகள், டெல்டா மாவட்டங்களுக்கு படையெடுத்து நெல் வாங்கி செல்கின்றனர். வடமாநிலங்களில் நெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நெல் வியாபாரிகள் அதிகளவு நெல் வாங்க குவிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தசூழலில், டெல்டா விவசாயிகளும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்காமல், வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் தாமதம், நெல் வியாபாரிகள் ஈரப்பதத்தை அதிகம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆகியவையே, வியாபாரிகளுக்கு நெல்லை விற்க ஆர்வம் காட்ட காரணம் என விவசாயிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.