இரண்டு மாவட்டங்களை இணைக்கும் வகையிலும், கல்லணை வழியாக கனரக வாகனங்கள் செல்லும் வகையிலும், கல்லணை கொள்ளிட ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக, கடந்த 2016-ஆம் ஆண்டு, அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில் 67 கோடி ரூபாய் செலவில் பூமி பூஜை நடத்தப்பட்டு, பாலம் கட்டப்பட்டது. இதனால், தங்கள் நீண்ட கோரிக்கை நிறைவேறி விட்டதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், கட்டுமானப் பணியின்போது, தூண்களில் விரிசல் ஏற்பட்டு சீரமைக்கப்பட்டதுடன், தற்போது காங்கிரீட் தளமும் பெயர்ந்து வருகிறது. இதனால், வேதனை அடைந்துள்ள அந்த பகுதி, பாலத்தை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, பாலத்தை கட்டிய ஒப்பந்ததாரரிடம் 2 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், பாலத்தை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தஞ்சை நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறியுள்ளார்.