`நீட்' - சிக்கல்... ரிப்பீட்டர்ஸ்களால் பறிபோகும் கனவு... கேள்விக்குறியான மாணவர்களின் எதிர்காலம்

Update: 2024-08-20 16:04 GMT

மருத்துவ படிப்பு சேர்க்கையில், ஒவ்வொரு ஆண்டும் பழைய மாணவர்களே ஆதிக்கம் செலுத்துவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறை தேர்வெழுதும் மாணவர்களின் நிலை என்ன என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

நீட் தேர்வும், சர்ச்சையும் என சொல்லும் அளவுக்கு திரும்பும் திசையெல்லாம் குழப்பமாகவே இருப்பது இந்த தேர்வு ஒன்று தான்...

இருந்த போதிலும் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்பை கனவாக கொண்டு லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வை எழுதி தான் வருகின்றனர்.

இதற்காக பொதுத்தேர்வை காட்டிலும், நீட் தேர்வுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து, பயிற்சி மையத்தில் சேர்ந்து படிப்பதையெல்லாம் பார்க்க முடிகிறது. ஆனால் நீட் தேர்வை மீண்டும் மீண்டும் எழுதும் ரிப்பீட்டர்களால் சிக்கல் தான் முன்வந்து நிற்கிறது இப்போது...

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை எழுதும் மாணவர்களில், 12-ஆம் வகுப்பு படித்து முதல்முறையாக நீட் தேர்வை எழுதக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், அதே நேரத்தில் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று முறை நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்து வருகிறது.

ரிப்பீட்டர்ஸ் என்று சொல்லக்கூடிய பழைய மாணவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது போலவே, மருத்துவ இடங்களை அதிக அளவில் எடுத்துச் செல்வதிலும் இவர்களே முதலிடத்தில் இருக்கின்றனர்.

முதல் முயற்சியில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கலந்தாய்வில் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்ற சோகம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்கிறது.

வெகு குறைவான மாணவர்கள், குறிப்பாக சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்து முதல் முறையாக நீட் தேர்வு எழுதும் மாணவர்களில் சிலர் மட்டும் சாதிக்கின்றனர்.

அரசு பள்ளிகளில் படித்து முதல்முறையாக தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் கனவு சோபிப்பதில்லை. இரண்டு முறை, மூன்று முறை நீட் தேர்வு எழுதிய பிறகே மருத்துவ படிப்பு என்பது மாணவர்களுக்கு சாத்தியமாகிறது.

இந்த ஆண்டு மொத்தம் 43 ஆயிரத்து 63 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 24,334 மாணவர்கள் பழைய மாணவர்கள் என்ற அதிர்ச்சி தகவலை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.

அதாவது மொத்த விண்ணப்பங்களில், 56.50 விழுக்காடு மாணவர்கள் பழைய மாணவர்கள் என்பதும், 44 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே முதல் முயற்சியில் நீட் தேர்வை எழுதியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்கள் அனைவருமே 2023-24 ம் கல்வியாண்டிற்கு முந்தைய ஆண்டுகளில் படித்த பழைய மாணவர்கள் தானாம்...

இந்த ஆண்டும் 80 விழுக்காடுகளுக்கும் அதிகமான மருத்துவ இடங்கள் பழைய மாணவர்களுக்கே செல்ல இருக்கிறது. புதிய மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் சொற்ப அளவிலே கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம், பல லட்சம் ரூபாய் செலவழித்து இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் படித்தால் மட்டுமே மருத்துவ படிப்பு கனவு நனவாகும் என்பதைத்தான் இந்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் கல்வியாளர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்