வெறும் கைகளால் சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை அகற்றும் மாநகராட்சி ஊழியர்... மனதை நொறுக்கும் காட்சி
மதுரை மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்தாமல், மனிதர்களை பயன்படுத்தும் நிலை தொடர்ந்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஓபுளாபடித்துறை பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. பிரதான சாலையில், வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்போது பாதாள சாக்கடை குழாய்க்குள் மதுரை மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் அமர்ந்து வெறும் கைகளால் கழிவுநீர் அடைப்பை அகற்றினர். எந்தவித பாதுகாப்பு உபகரணமின்றியும் கையுறை எதுவும் இன்றியும் அவர்களை பணியில் ஈடுபடுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கும், பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி பணி செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையிலும் மதுரை மாநகராட்சி பகுதியில் இதுபோன்ற நிலை தொடர்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.