கரூர் கல்யாண பசூபதீஸ்வரக் கோயில் சொத்துகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கடந்த 2019-ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுமெனவும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வரை சம்பந்தப்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை எனக் கூறி, தமிழ்நாடு அரசின் வருவாய் துறை செயலாளர் ராஜாராமன், உள்துறை செயலாளர் அமுதா, சுற்றுலாத் துறை செயலாளர் மணிவாசகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் உள்ளிட்ட பலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை மட்டுமே வழக்கில் சேர்க்க வேண்வுமெனவும், தேவையின்றி மற்ற அதிகாரிகளின் பெயர்களை சேர்க்கக் கூடாது எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.