8 நாள் போராடி நின்ற மூச்சு.. வழியே இல்லாமல் பிரியும் உயிர்கள்.. பிரசவமாக இருந்தாலும் இதான் நிலை

Update: 2024-08-20 10:48 GMT

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 40 வயது பெண்ணை, கரடு முரடான மலைப்பாதையில் தூக்கிக் கொண்டு பெண்ணின் உறவினர்கள் ஓடிய அவலக் காட்சிகள் தான் இது....

சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கிச் சென்ற மக்கள்

பெண்ணை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என சுமார் 5 கிலோ மீட்டர் தூரம்... டோலி கட்டி பெண்ணை உறவினர்கள் தூக்கிச் சென்ற இந்த சம்பவத்தில், எந்த வித பலனுமின்றி பெண் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்...

5 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான பாதையில் தூக்கி சென்ற அவலம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சின்னூர் மலைக்கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்ணான மாரியம்மாள் என்பவரின் உயிர்தான் இந்த சம்பவத்தில் பறிபோயிருக்கிறது...

முறையான மருத்துவ வசதியும், சாலை வசதியும் இல்லாததால் பெண்னை இழந்திருக்கின்றனர் உறவினர்கள்...

அத்தியாவசியமான அடிப்படை வசதிகளை கிடைக்காமல் போராடும் மலைக்கிராம மக்கள், தங்கள் கிராமத்துக்கான சாலை வசதிக்கும், போக்குவரத்து வசதிக்கும் யாரிடம் சென்று மன்றாடுவது என நிர்கதியாய் தவிக்கின்றனர்...

உடல் நலம் மோசமாகி சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்த கோரம்

இந்த பிரச்சினை சின்னூர் மலைக்கிராமத்துக்கு மட்டுமல்ல...

கொடைக்கானல் வெள்ளக்கெவி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர், பெரியூர், கடப்பாறை குழி உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கும் தான்...

கரடு முரடான வனப் பகுதியினை கடந்து சென்றுதான் தங்களின் அத்தியாவசிய தேவைகளை தேனி, பெரியகுளத்தில் இந்தமக்கள் பூர்த்தி செய்து வருகின்றனர்...

இதில், கொடுமை என்னவென்றால்... தங்கள் கிராமத்தில் கருவுறும் தாய்மார்களை... அவர்களின் பிரசவ சிகிச்சைக்காக இவ்வாறு ஆபத்தான முறையில் டோலி கட்டிதான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனராம்..

அதுவும் அந்த நேரங்களில் மழை குறுக்கிட்டால் அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது...

தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மேலும், அருகிலுள்ள கல்லாறு, குப்பாம்பாறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் நிலைமை தலைகீழாக மாறிவிடும்...

இவ்வாறு நிலைமை தலைகீழாக மாறியதில்தான் இந்த மாரியம்மாளின் உயிர் பறிபோயிருக்கிறது...

கிராமத்துக்குள் செல்ல முடியாமல் திரும்பிய மருத்துவக்குழு

8 நாள்களுக்கு முன்பே, உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கிப்போன அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் முயன்றிருக்கின்றனர்...

அப்போது பெய்த தொடர்மழையால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், மாரியம்மாளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாத சூழல்...

இந்நிலையில், செய்வதறியாமல் தவித்த மக்கள், பெரும் சிரமத்திற்கு நடுவே வெளியூரில் இருக்கும் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்...

அந்த மருத்துவக்குழுவும் புறப்பட்டு வந்த நிலையில், ஆற்றை கடந்து அவர்களால் கிராமத்திற்கு செல்ல முடியவில்லை...

இந்நிலையில், 8 நாள்களுக்கு பிறகு ஆற்றில் வரத்து குறைந்த பின் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில், உடல் நலம் மிகவும் குன்றிப்போய் உயிரிழந்திருக்கிறார் மாரியம்மாள்...

அடிப்படை வசதியான சாலை வசதி கூட இல்லாத ஒரு கிராமம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு செல்லக்கூட முடியாமல் ஒரு உயிர் போவதெல்லாம் கொடுமை. துரிதமாக நடவடிக்கை எடுத்தால் அடுத்த உயிர்ப்பலியை தவிர்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்