கன்னியாகுமரி அருகே அரசுப் பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கைக்கு ஆயிரம் ரூபாய் கட்டாயம் வசூலிப்பதை கண்டித்து பெண் ஒருவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ பரவி வருகிறது. கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, உதவி தலைமை ஆசிரியரிடம் பெண் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, கணினி இயக்க தற்காலிக ஆசிரியர், தூய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று கூறுவது போன்று வீடியோவில் உள்ளது. ஏன் ஏழை மாணவர்களிடம் வசூலிக்கிறீர்கள் என்று அந்த பெண் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பது, கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.