தென்மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், டெல்லி உள்ளிட்ட 4 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலைவீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் நேற்று 47.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்திய வரலாற்றிலேயே இதுதான் மிக அதிகமான வெப்பநிலை பதிவாக அறியப்படுகிறது. உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் ஒருசில பகுதிகளிலும் குஜராத்தின் சவுராஷ்டிரா,கட்ச் ஆகிய பகுதிகளில் மே 23-ம் தேதியன்று வெப்ப அலை வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களில் கேரளாவின் கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.