புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குறிச்சியை சேர்ந்தவர் கவிதா. இவர் தனது அக்காவின் கணவரான பாலசேகரிடமிருந்து துணி வியாபாரம் செய்வதற்காக கடன் பெற்றிருக்கிறார். நீண்ட நாள்களாகியும் பணத்தை திருப்பிதராததால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 9 ஆம் தேதி ஆட்களை அழைத்துக் கொண்டு கவிதாவின் வீட்டிற்கு சென்ற பாலசேகர், அங்கு தகராறில் ஈடுபட்டு, கவிதாவை துப்பாக்கியால் சுட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நூலிழையில் உயிர் தப்பிய கவிதா போலீசில் புகாரளித்ததை தொடர்ந்து பாலசேகரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து உரிய ஆவணமில்லாத துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், துப்பாக்கியை வட மாநில இளைஞர் ஒருவரிடமிருந்து பாலசேகர் வாங்கியது தெரியவர, உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த நித்திஷ் குமார் என்ற இளைஞரை கும்பகோணத்தில் வைத்து கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.