பீகார் மாநிலம் பாகல்பூரில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வரும் அகுவானி பாலம் 3வது முறையாக இடிந்து விழுந்தது.
பீகார் மாநிலத்தில் ஆயிரத்து 710 கோடி ரூபாய் செலவில், கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. ஒன்பது மற்றும் 10வது தூண்களுக்கு இடையே உள்ள பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஒன்பது ஆண்டுகளாக கட்டுமானப்பணியில் உள்ள சுமார் 3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தின் சில பகுதிகள், ஏற்கனவே, கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரலிலும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலும் இடிந்து விழுந்தன. நிதிஷ் குமார் அரசின் முதன்மைத் திட்டமாகக் கருதப்படும் அகுவானி-சுல்தங்கஞ்ச் பாலம், மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு இடையே ஒரு முக்கிய இணைப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. கடந்த 2014-ல் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டாலும், இதுவரை 45 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது.