பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். ஒரு கோடி வீடுகளின் மேற்கூரையில் சூரியஒளி மின்சக்தி தகடுகள் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாகத் தெரிவித்தனர். ரூ.75 ஆயிரத்து 21 கோடி மதிப்புள்ள இந்த திட்டம் குறித்து மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியான நிலையில், மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளது. இதில், ஒரு கிலோ வாட் சூரியமின்சக்தி திறன் கொண்ட தகடுகளை அமைப்பதற்கு 30 ஆயிரம் ரூபாயும், 2 கிலோ வாட் திறன் கொண்ட மின்சக்தி தகடுகளுக்கு 60 ஆயிரம் ரூபாயும் மத்திய அரசு மானியமாக வழங்க உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கப்பெறும் என்று அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.