2 கைகளையும் இழந்த இளைஞர் ஒருவர் தமிழகத்தில் முதல்முறையாக கார் ஓட்டுவதற்கான உரிமம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை வியாசர்பாடி பெரியார் நகரைச் சேர்ந்தவர் தான்சென்... 31 வயதான இவர் தனது பத்தாவது வயதில் மின்சார விபத்தில் மூட்டுக்குக் கீழ் 2 கைகளையும் இழந்துள்ளார்... தொடர் முயற்சியால் பொறியியல் படித்து முடித்த பின், பி.எல். படித்த அவர் எம்.எல். படித்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி, ஒன்றரை வயதில் மகள் உள்ளார்.
தொழிலதிபர் ஸ்ரீவாரி சங்கர், நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் உதவியுடன் கார் ஓட்டுவதற்கு கற்றுக் கொண்ட தான்சென், ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப பித்த போது நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, சென்னை கே.கே. நகரில் உள்ள புனர்வாழ்வு மருத்துவமனையின் உதவியை நாடியுள்ளார்...
அங்கு, அவருக்கு ஏற்ப காரின் வடிவமைப்பை மாற்றி, தானியங்கி கியர் முறையைக் கையாளும்படி அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையின் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை இயக்குநர் மற்றும் மருத்துவர்கள் வழிகாட்டுதலின் படி ரெட்டேரி ஆர்டிஓ அலுவலகத்தில் தான்சென் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார்.
தமிழகத்திலேயே முதல் முறையாகவும், நாட்டிலேயே 3வது நபராகவும் 2 கைகளை இழந்த ஒருவர், ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது...