திண்டுக்கல் அருகே 2 மகள்களை தூக்கில் தொங்கவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் நந்தவனம் ரோட்டில், இருசக்கர வாகன ஒர்க் ஷாப் நடத்தி வரும் சீனிவாசனுக்கும், அவரது மனைவி மேனகாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி, கடந்த வாரம் திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், வீட்டில் உள்ள மின் மோட்டாரை கழற்றி, ஒர்க் ஷாப்பில் பொருத்துவதற்காக வந்த சீனிவாசனிடம், மேனகா வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் மகளிர் காவல்நிலையம் வரை செல்லவே, அங்கு சீனிவாசனை அழைத்துச் சென்று போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது செல்போனில் பேசிய மேனகா, மன அழுத்தத்தில் சீனிவாசன் மீது புகார் கொடுத்ததாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து மேனகாவுக்கு அறிவுரை கூறிய போலீசார், சீனிவாசனை அனுப்பி வைத்துள்ளனர். விசாரணை முடிந்து சீனிவாசன் வீட்டிற்குச் சென்ற போது, கதவு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. காலிங் பெல் அழைப்பு விடுத்தும் சத்தம் இல்லாததால், ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே பார்த்த போது, அவரது 2 மகள்கள் ஹிந்து பாஹினி , தானிய ஸ்ரீ மற்றும் மனைவி மேனகா ஆகிய 3 பேரும் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனே சீனிவாசன் தகவல் தெரிவித்த நிலையில், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், இறந்த மாணவி ஹிந்து பாஹினி,10ம் வகுப்பு தேர்வில் அவர் பயிலும் பள்ளியில் முதல் மாணவியாக வருவார் எனக் கூறி உறவினர்கள் அழுதது பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.