உலகின் மிக ஆபத்தான அல்-காலி பாலைவனத்தில் சிக்கிய இந்தியர்... 5 நாட்களுக்கு பின் வற்றி வதங்கிய உடல்
உலகின் மிக ஆபத்தான அல்-காலி பாலைவனத்தில் சிக்கிய இந்தியர்... 5 நாட்களுக்கு பின் வற்றி வதங்கிய உடல்
காரில் எரிபொருள் தீர்ந்து, ஜிபிஎஸ் உதவியும் கிடைக்கப்பெறாமல், பாலைவனத்திலேயே சிக்கி தெலங்கானா இளைஞர் உட்பட 2 பேர் உயிரிழந்த சோக சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
தெலங்கானாவை சேர்ந்த 27 வயது இளைஞரான முகமது சேசத் கான், சவுதி அரேபியாவில், தொலைதொடர்பு டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்துள்ளார்..
பணி சம்பந்தமாக சூடானை சேர்ந்த சக பணியாளருடன் காரில் சென்றுள்ளார் முகமது சேசத் கான்.
காரில் சென்று கொண்டிருந்த போது ஜிபிஎஸ் சேவை துண்டிக்கப்பட்டதால், வழி தெரியாமல் அலைந்து திரிந்துள்ளனர் இருவரும்..இச்சூழ்நிலையை மோசமாக்கும் வகையில் இருவரின் செல்போன்களின் பேட்டரியும் தீர்ந்து விட்டது..
ஒரு கட்டத்தில் காரில் இருந்த எரிபொருளும் தீர்ந்து போக, உலகின் மிக ஆபத்தான பாலைவனமான அல்-காலி பாலைவனத்தில் சிக்கிக் கொண்டனர்.
உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீரின்றி, பாலைவனத்தின் வெப்பத்தில் சிக்கிய இருவரும், தவித்து வந்துள்ளனர்.
பாலைவனத்தில் மனித நடமாட்டமே இல்லாததால், கிட்டத்தட்ட 5 நாட்களாக தவித்த இருவரும், பசிகொடுமையிலும், வெப்ப தாக்கத்தினாலும் துடிதுடிக்க உயிரிழந்து விட்டனர்.
இருவரும் பணி செய்து வந்த நிறுவனம் அளித்த புகாரின் பேரில், சவுதி அதிகாரிகள் தீவிர தேடுதல் பணியில் களமிறங்கிய நிலையில், 5 நாட்கள் கழித்து இருவரையும் சடலமாக கண்டெடுத்தனர்.
எரிபொருள் தீர்ந்து போன வாகனத்தின் அருகிலேயே இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.