எங்கோ இருக்கும் `டானா' புயல்.. ஆனாலும் TN-ஐ உலுக்கிய பேய்மழை - மூழ்கிய 3 பெரும் மாநகரங்கள்

Update: 2024-10-24 04:31 GMT

எங்கோ இருக்கும் `டானா' புயல்.. ஆனாலும் TN-ஐ உலுக்கிய பேய்மழை - மூழ்கிய 3 பெரும் மாநகரங்கள்

தமிழ்நாட்டில் பெய்து வரும் மழையால் மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சென்னையை வெள்ளத்தில் மிதக்க வைத்த மழை, உள் மாவட்டங்களையும் விட்டுவைக்க வில்லை. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது..

இதன் ஒருபகுதியாக கோவையில் ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை போன்ற முக்கிய பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது..

சாலைகளில் வெள்ளம் போல, பெருக்கெடுத்து ஓடும் மழையால் வாகன ஓட்டிகள் திக்கு தெரியாமல் தவித்து வருகின்றனர்.

தடாகம் அரசு பொறியியல் கல்லூரி ஆய்வுக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் மீது மழைநீர் அருவிபோல, கொட்டுகிறது...

செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர், இருகூர் பகுதியில் 30 வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், அப்பகுதியினர் மாற்று இடத்தில் தங்க வைக்கப்பட்டதாகவும் கூறினார். மீண்டும் மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள எல்லாம் தயாராக உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதேபோல, மதுரையில் பெய்த கனமழையால், கரிசல் குளம் மற்றும் விளாங்குடி கண்மாய்கள் நிரம்பின. இதனால், மதகுகளில் திறந்துவிடப்பட்ட நீர் விளாங்குடி கண்மாய் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்குள் புகுந்து வெள்ளக் காடாகின..

இதனால், சாலையில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால், பொதுமக்களை "பரிசல்" மூலம் மீட்கும் பணியில் அப்பகுதியினர் ஈடுபட்டனர்.. மதுரை பந்தல்குடி பகுதியில் கால்வாயை சரிசெய்ய சென்ற பாண்டியராஜன் என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூர் அருகே தொட்ட மஞ்சு கிராமத்தில் இடி மின்னலுடன் பெய்த கனமழையின் போது, பீன்ஸை அறுவடை செய்த பெண் ஒருவர் மீது மின்னல் தாக்கியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதேபோல, திருப்பூர் மாவட்டம், ஜோத்தம்பட்டி ஊராட்சி ஆஸ்பத்திரி மேடு பகுதியில், வீடு ஒன்றில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.. இந்த வீடு "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா" திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தொகுப்பு வீடு என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, திருப்பத்தூர் அருகே புதூர் நடு மலைப்பகுதியில் கனமழையின் காரணமாக, ஏற்பட்ட மண்சரிவால் சாலைக்கு வந்த ராட்சத பாறைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்